மெய்ஞான யோகமையம்
மெய் என்பதற்கு தமிழில் பல பொருள் உண்டு இவற்றில் முதலில் ஒருவரின் மனதில்
வரும் பொருள் உண்மை அல்லது உடல். ஞானம் என்பது ஒருவர் புத்தகத்தின் வாயிலாக
பெறக்கூடியது அல்ல. குரு தரும் பயிற்சிகளை யார் ஒருவர் முழுவதுமாக செய்து
வருகிறார்களோ அவர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. இதை ஒருவர் உணர்ந்து
அறிந்து கொள்ள முடியுமே தவிர படித்து, கேட்டு அறிந்துகொள்ள இயலாது. நமக்கு
கிடைத்துள்ள இந்த மானிடப் பிறப்பில் யார் ஒருவர் தன்னைப் பற்றிய புரிதல் வேண்டும்
என்று எண்ணி ஒரு குருவைத் தேடுகிறார்களோ அவர்களின் முன் குருவானவர் தோன்றுவார்.
எப்பொழுது ஒருவர் தன்னை அறிகிறாரோ அப்பொழுது அவர் தன்னைச் சுற்றியுள்ள
அனைத்தையும் புரிந்து கொள்வார். இந்த புரிதல் தெளிவு தருவது மட்டுமின்றி நம்
அனைவரின் பிறப்பின் காரணத்தை உணர்ந்துகொண்டு அதை நோக்கி பயணம்
செய்ய உதவுகிறது. "அன்பே கடவுள்" என்று நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம்
ஆனால் அந்த அன்பை முழுமையாக உணர்வதற்கும், பிறரிடம் அன்புடன் நடந்து
கொள்வதற்கும் தன்னைப் பற்றிய உணர்தல் மற்றும் புரிதல் மிகவும் முக்கியமானது.
அந்த உணர்தலை நமக்குத் தருவதில் "மெய்ஞான யோக மையம்" முக்கிய பங்கு
அளிக்கிறது. அனைத்து உயிர்களையும் சமமாக எண்ணுவதற்கும், நடத்துவதற்கும்
மெய்ஞானம் என்பது ஒருவருக்கு இன்றியமையாதது அத்தகைய மெய்ஞானத்தை துறவு
மேற்கொண்டு தான் உணர முடியும் என்று இல்லாமல் நாம் இவ்வுலக வாழ்க்கையோடு
சேர்ந்து உணர்ந்து கொள்வதற்கு மெய்ஞான யோக மையம் ஒரு பாலமாக அமைகிறது.
தன்னம்பிக்கையும், மன உறுதியும் ஒருவரிடம் இருக்கும் போது அதனுடன் சரியான
வழிகாட்டுதல் நம்மை செம்மைப்படுத்தி நாம் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி
நம்மை அழைத்துச் செல்லும்.
பயிற்சிகளை கற்றுக் கொள்வதுடன் நின்று விடாமல் யாரொருவர் வைராக்கியத்துடன்
தினமும் பயிற்சி செய்கிறாரோ அவரின் மனமும் உடலும் செம்மை பட்டு உலக
வாழ்க்கையிலும், ஆன்மீகத்திலும் சுலபமாக வெற்றி பெறலாம்.